சர்வதேச நீரிழிவு தினத்தையொட்டி கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் - இலங்கையுடன் இணைந்து திருகோணமலை, கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலை ஊடாக நடாத்திய சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும் 2022.11.14 ஆம் 15 ஆம் திகதிகளில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அன்டென் அனஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் யாழ்ப்பாண அலுவலக துணைத் தூதர் திரு. ஸ்ரீ. ராக்கேஷ் நட்ராஜ் அவர்கள் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் அவர்களும், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ. ஸ்ரீதர் அவர்களும், திருகோணமலை நகரசபை செயலாளர் திரு. வி.ராஜசேகர் அவர்களும் கலந்துகொண்டனர்.
மேலும், சுதேச மருத்துவத் திணைக்களத்தின் திட்டமிடல் பிரிவு வைத்தியர்களான எஸ்.சிவச்செல்வன், வைத்தியர் எஸ்.சதீஸ் உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இரண்டு நாட்களாக நடைபெற்ற இவ்விழிப்புணர்வு கண்காட்சியில் நீரிழிவு நோய்க்கான இரத்தப் பரிசோதனைகளுடன் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்ட அதேவேளை, பாரம்பரிய உணவு முறை தொடர்பான கண்காட்சியும், விற்பனையும் இடம்பெற்றது.
இதில் அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு உச்ச பயனை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.